Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

திரையரங்கு உரிமையை இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கலாம்; விரைவில் ஆணை வெளியாகும்: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினை என பாஜக தலைவர் முருகன் கூறுவது அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரையரங்குஉரிமையாளர்களின் கோரிக்கையைஏற்று திரையரங்குகளுக்கான உரிமையை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

விபிஎப் கட்டணத்தை திரையரங்குஉரிமையாளர்கள் தான் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். இது அரசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை என்றாலும் கூட, இதுதொடர்பாக க்யூப் நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் அமர்ந்து பேச வேண்டும் எனவலியுறுத்தினோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே, புதிய திரைப்படங்கள் வெளியிட தடையில்லை என்ற சூழ்நிலை உள்ளது.

அதிமுக, திமுக ஆகியவை மாநிலக்கட்சிகள். எங்களது தலைமை இங்கேயே உள்ளது. தேசியக் கட்சிக்குதலைமை இங்கு இல்லை. மத்தியஉள்துறை அமைச்சர் என்ற வகையில் அமித்ஷாவை நாங்கள் வரவேற்போம். அவர் வருவதால் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினை என பாஜக தலைவர் முருகன் கூறுவது அவரது சொந்தக் கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி சண்முக நகரில் ரூ.1.23 கோடியில் கட்டி முடித்து தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் ரூ.2.60 கோடியில் கட்டிமுடித்து முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைச்சர் குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x