

சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பது பற்றி எனக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தொழிலதிபர் ஏ.சி.முத்தையா தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று ரூ.274 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஐடிபிஐ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட 8 பேர் மீது நேற்று முன்தினம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது கூட்டு சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து ஏ.சி.முத்தையா உள்ளிட்ட 8 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 7 இடங்களிலும் ஹைதரா பாத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக தொழிலதி பர் ஏ.சி.முத்தையாவிடம் கேட்டபோது, ‘‘சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சேர்மனாக இருந்தேன். மற்றபடி எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லை. அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. என் மீது வழக்கு உள்ளதா என்று தெரியாது. சிபிஐ அதிகாரிகள் சோதனைக்கான ஆணையை காண்பித்து என் வீட்டில் சோதனை செய்தனர். சுமார் 20 நிமிடங்கள் சோதனை நடந்தது. அதன்பின் அவர்கள், ‘மன்னித்து விடுங்கள்’ என்று சொல்லிவிட்டு சென்றனர்” என்றார்.