Published : 19 Nov 2020 06:39 PM
Last Updated : 19 Nov 2020 06:39 PM

7.5% உள் ஒதுக்கீடு என் மனதில் உதித்து நான் கொண்டுவந்தது; எந்த எதிர்க்கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை: முதல்வர் பழனிசாமி பேச்சு 

சென்னை

எதிர்க்கட்சித் தலைவரும், எந்த எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைக்கவில்லை. பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இதற்கு எப்படித் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தோம். நான் சிந்தித்தேன். என்னுடைய எண்ணத்தில் உதித்தது உள் ஒதுக்கீடு. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தோம் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், மேட்டூர், வனவாசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“இந்திய அளவில் பார்க்கின்ற பொழுது, 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது, 32 சதவீதம் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிலையை மாற்றி, இப்பொழுது ஜெயலலிதா காலத்திலும் சரி, அவர் வழியில் செயல்படுகின்ற தமிழக அரசும் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க நல்ல சூழ்நிலையை உருவாக்கி அதற்கு அதிகமான கல்லூரிகளைத் திறந்ததன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாமல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடி கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகளைத் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அதேபோல தமிழக வரலாற்றிலேயே, இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைக் கொண்டு வந்த சரித்திரம் கிடையாது. இந்தியாவிலேயே, தமிழ்நாடு ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறது.

ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைக் கொண்டுவந்து, 2021-22ஆம் ஆண்டு 1,650 மாணவர்கள் ஒரே நேரத்தில் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். ஏற்கெனவே 2011ஆம் ஆண்டு வரை, ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கும் வரை, தமிழகத்தில் 1,945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன.

அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்று சுமார் 3,600 மாணவர்கள் கூடுதலாக மருத்துவக் கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம். இதன்மூலம் எந்த அளவிற்கு எங்களுடைய அரசு மாணவர்கள் உயர்கல்வி பயில குறிப்பாக மருத்துவக் கல்வி பயில முயற்சிகள் எடுத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆனால், சில அரசியல் கட்சித் தலைவர்கள் நீட் தேர்வு, நீட் தேர்வு என்று எப்பொழுது பார்த்தாலும் குரல் கொடுக்கின்றார்கள். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் அதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஆனால், கேட்க வேண்டிய இடத்தில் கேட்பதில்லை. கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தானே சரியான பதில் கிடைக்கும்.

ஏனென்றால், நீட் தேர்வைக் கொண்டு வந்தது யார்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, திமுக அந்த ஆட்சியில் அங்கம் வகித்தது. அந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள். ஆனால், முழுப் பூசணிக்காயையை சோற்றில் மறைப்பது போல எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர்.

இவர்கள் கொண்டுவந்த நீட் தேர்வை நாங்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தோம், சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தோம். இருந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வை நாம் அமல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நீட் தேர்வை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் நாம் ஏழை எளிய மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தோம்.

எந்த எதிர்க்கட்சித் தலைவரும், எந்த எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இதற்கு எப்படித் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தோம். நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெறமுடியாத காரணத்தால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த வகையில் நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து, என்னுடைய எண்ணத்தில் உதித்தது உள் ஒதுக்கீடு. 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தோம்.

பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க அரசு ஆணையிட்டு, உத்தரவு வழங்கி நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி நம்முடைய மாவட்டத்தில் மட்டும் 21 மாணவர்கள் இன்றைக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கின்றார்கள். அதுவும் 21-வது மாணவர் நீட் தேர்வில் 211 மதிப்பெண் வாங்கி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், அரசு ஏழை, எளிய மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள்தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 41 சதவீதம், அதாவது 8,41,251 மாணவர்கள் 12-ம் வகுப்பு படிக்கிறார்கள். அதில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றபின், கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள்தான் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைக்கும். தமிழ்நாட்டிலுள்ள 3,054 அரசுப் பள்ளிகளில் 3,44,485 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

இந்த ஆண்டு சுமார் 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைத்திருக்கிறது. ஆகவே, தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டமான 7.5 உள் ஒதுக்கீட்டின் வாயிலாக, ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர் கூட மருத்துவக் கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை எங்களுடைய அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படி கல்வியில் பல்வேறு புரட்சிகளைச் செய்த அரசு தமிழக அரசு என்பதை கோடிட்டுக் காட்ட விழைகிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x