Last Updated : 19 Nov, 2020 05:53 PM

 

Published : 19 Nov 2020 05:53 PM
Last Updated : 19 Nov 2020 05:53 PM

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள்; பிரபலமானவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் பிரபலமானவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும், இந்த விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக்கோரி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நடிகை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.

கங்குலி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அப்போது அவரிடம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்களை லட்சக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். அந்த பிரபலங்களை தங்களின் எதிர்காலமாக கருதி வாழ்கின்றனர்.

இந்தச் சூழலில் அந்த பிரபலங்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடித்து அதனை ஊக்குவிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த பிரபலங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக அவர்களிடம் கூறுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற எதிர்மனுதாரர்கள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிச. 10-க்கு ஒத்திவைத்து, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக (அமிகஸ்கியூரியாக) மூத்த வழக்கறிஞர் வீராகதிரவனை நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x