

தமிழகத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்குப் பதில் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க 108 ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதில் 108 ஆம்புலன்ஸ் சேவை பெரும் பங்கு வகிக்கிறது.
இருப்பினும் போதுமான அளவு ஆம்புலன்ஸ்கள் இல்லை. இதனால் நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 108 ஆம்புலன்ஸ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பைக் ஆம்புலன்ஸ்களை முறையாக செயல்படுத்தவும், கூடுதல் பைக் ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தவும், ஒவ்வொரு வருவாய் மண்டலத்திற்கும் ஒரு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.
பின்னர், நீதிபதிகள், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர் நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும், அதற்காக தனியார் மருத்துவமனைகளிடம் கமிஷன் பெறுவதாகவும் புகார்கள் வருகின்றன.
இதைத்தடுக்க 108 ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மருத்துவ தேவைக்கு வான்வழி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக அரசு பதிலளிக்க வேண்டும் என்றனர். பின்னர், விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.