Last Updated : 19 Nov, 2020 06:17 PM

 

Published : 19 Nov 2020 06:17 PM
Last Updated : 19 Nov 2020 06:17 PM

புதுச்சேரி ஸ்டேடிய விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர் விசாரணை: அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் - நாராயணசாமி

புதுச்சேரியில் அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஸ்டேடியம் அமைத்துள்ள விவகாரத்தில் அங்கு நகரத் திட்டக்குழுமம் அனுமதியின்றிக் கட்டிடம் கட்டியது தொடர்பாக தலைமைச் செயலாளர் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளார்.

புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் நிறுவனமொன்று அப்பகுதியில் அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளதாகப் புகார் எழுந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அரசுத்துறைகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், உள்ளூர் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கூறி ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மறியல் போராட்டத்தை அண்மையில் நடத்தினார்.

ஸ்டேடியத்தில் நகரத் திட்டக்குழுமம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரியக் கட்டிடம்.

அதே நேரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கு நன்றி தெரிவித்து துத்திப்பட்டு கிராம மக்கள் என்ற பெயரில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "துத்திப்பட்டு கிராமத்தில் அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறி மின் இணைப்பு, அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தது, நகரத் திட்டக்குழுமம் அனுமதியின்றி கட்டிடம் கட்டியது தொடர்பான கிராம மக்கள் புகாரின் பேரில் ஆளுநர் கிரண்பேடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண்பேடிக்கு நன்றி தெரிவித்து துத்திப்பட்டு கிராமப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.

இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் இன்று (நவ.19) கேட்டதற்கு, "கிரிக்கெட் ஸ்டேடிய விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அரசு தட்டிக்கேட்கும். நடவடிக்கை எடுக்கும். ஆக்கிரமிப்பு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை மிரட்டி மின்சாரத்தைத் தடை செய்வதும், கட்டிடத்தை இடிக்க ஆளுநர் உத்தரவிடவும் யார் அதிகாரம் தந்தது? புகார் ஆளுநருக்கு வந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். இங்கு இரட்டை ஆட்சி நடக்கவில்லை" என்று தெரிவித்தார்.

ஸ்டேடிய விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, வாட்ஸ் அப்பில் கூறுகையில், "எங்களுக்கு விளையாட்டு வேண்டும். ஆனால், நெறிமுறையற்ற வழிகளில் அது இருக்கக்கூடாது. அனைத்து வழிகளிலும் ஏமாற்றிச் செயல்படக்கூடாது. எவ்வளவு உயரத்தில் யார் இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் மேலானது, பொதுவானது. முக்கியமாக, நகரத் திட்டக்குழுமத்திடம் எவ்வித அனுமதியின்றி ஸ்டேடியத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது தொடர்பாக தலைமைச்செயலாளர் அஸ்வினி குமார் விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார். இவ்விவரங்கள் அனைத்தும் பிசிசிஐக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x