திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் நடைபெறும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் நடைபெறும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 
Updated on
1 min read

திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும் என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கந்த சஷ்டி விழா நவ. 15-ல் தொடங்கி நவ 21 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நவ. 20-ல் நடைபெறும். மறுநாள் கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். இவற்றைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இந்தாண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக சூரசம்ஹாரமும், திருக்கால்யாணமும் கோயில் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாக்கள் பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும்.

அதன்படி சூரசம்ஹாரம் கடற்கரையிலும், திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் பாரம்பரிய வழக்கப்படி நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும், திருக்கல்யாணம் 108 மகாதேவர் சன்னதி முன்பும் நடைபெறும் என்றார்.

இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in