

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் திறப்பு விவகாரம் தொடர்பாக, சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து வலியுறுத்த எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்.டி.சி) கீழ் தமிழகத்தில் 7, கேரளாவில் 4, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என நாடு முழுவதும் மொத்தம் 14 இடங்களில் பஞ்சாலைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 7 இடங்களில் பஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 4,400 நிரந்தரத் தொழிலாளர்கள், 5,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த மார்ச் இறுதியில் மூடப்பட்ட மேற்கண்ட 14 பஞ்சாலைகளும் தற்போது வரை மீண்டும் திறக்கப்படவில்லை. மூடப்பட்ட மேற்கண்ட பஞ்சாலைகளை மீண்டும் திறக்க, மத்திய அரசுக்குத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து பஞ்சாலைத் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் இன்று (நவ. 19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, "வரும் 21-ம் தேதி தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மறுநாள், 22-ம் தேதி சென்னையில் சந்தித்து, மூடப்பட்டுள்ள என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என , தமிழகத்தின் மேற்கு மாவட்ட எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்துவது" என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் உள்துறை அமைச்சக உத்தரவுப்படி, கரோனா காலத்தில் மூடப்பட்ட இந்தப் பஞ்சாலைகளில் இருந்த இருப்புகள் முழுவதும் விற்றுத் தீர்ந்ததாகத் தகவல் பெற்றேன். தற்போது கரோனா தொற்று குறைந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பஞ்சாலைகளில் உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்து வருகிறது.
ஆகவே, தமிழகத்தில் உள்ள என்டிசி மில்களை உடனடியாகத் திறப்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், இதில் உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ள என்.டி.சி பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்துவது தொடர்பாக தமிழகத்தின் மேற்கு மண்டல மாவட்ட எம்.பி.க்கள் கோவை எம்.பி.யான நான், ஆர்.சுப்பராயன் (திருப்பூர்), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), கணேசமூர்த்தி (ஈரோடு), ஜோதிமணி (கரூர்) மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் ஆகியோர் வரும் 22-ம் தேதி சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்" எனக் கூறப்பட்டுள்ளது.