

புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று (நவ. 19) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுவையில் கரோனா தாக்கம் முற்றிலுமாகக் குறைந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 97 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதத்தையும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை புதுவை மக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் வைக்கிறேன்.
ஒட்டுமொத்த 14.5 லட்சம் மக்கள்தொகையில் 3.75 லட்சம் பேருக்குக் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். நாள்தோறும் 3,500 முதல் 4,000 பேருக்குப் பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக எவ்வளவு நிதி செலவானாலும் பரிசோதனை தொடரும். ஒரு நபருக்குக் கரோனா பரிசோதனை நடத்த ரூ.2,400 செலவாகிறது.
தற்போது அமெரிக்காவில் வீட்டில் இருந்தபடியே கரோனா உள்ளதா? இல்லையா? எனக் கண்டறிய கருவியைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கருவியை வாங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நடைமுறைக்கு வரும்போது புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் இலவசமாக வழங்குவோம். இதற்காக எவ்வளவு நிதி செலவானாலும் அரசு ஏற்கும்.
மருத்துவக் கல்வியில் கடந்த 2008-ம் ஆண்டு அரசாணையின் மூலம் பிராந்திய ஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். இதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீட்டை அரசாணை மூலம் வழங்கத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குக் கோப்பு அனுப்பினோம். ஆளுநர் கிரண்பேடி இதற்கு அனுமதி தர மறுத்து மத்திய அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளார்.
புதுவை ஆளுநர் கிரண்பேடி காலம் கடத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசுக்குக் கோப்பு அனுப்பியுள்ளார். இதனால் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள், செயலாளர்களைச் சந்தித்து வலியுறுத்தினேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரக் கேட்டோம். ஆனால், அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. தொலைபேசி மூலம் பேசியுள்ளேன். மத்திய அமைச்சர் அமித் ஷா இதனைப் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இக்கோப்பு இன்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்குச் சென்றுள்ளது. மருத்துவக் கவுன்சில் அளித்துள்ள காலக்கெடுவுக்குள் இதனைப் பெற முழு முயற்சி எடுத்துள்ளோம். காலதாமதம் ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் பொறுப்பேற்க வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீடு பெறுவது தொடர்பான கோப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதற்கு ஒப்புதல் பெறவும் மத்திய சுகாதார அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். இதனைச் சட்டமாக இயற்ற வேண்டும். பத்து சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்தால் அரசாணை மூலம் இந்தக் கல்வியாண்டிலேயே நிறைவேற்றி விடலாம்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து உள்துறை, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு தட்டிக் கேட்பதில்லை.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான 40 கோப்புகளை மத்திய அரசுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ளார். மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசோடு ஒத்துழைக்க வேண்டும்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.