

திமுகவை ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்ற ஆசை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை, செம்பட்டியில் நடைபெற்றது.
திமுக கிழக்கு மாவட்டச்செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ., தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
வத்தலகுண்டு நகரில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
தமிழகத்தில் திராவிட இயக்கம் என்றால் அது திமுக தான்.
தற்போது நடைபெறும் எடுபிடி ஆட்சியை மக்கள் புறக்கணிக்கத் தயாராகிவிட்டனர். இழந்த உரிமையை மீட்டெடுக்க, நல்லாட்சி அமைய திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் மத்தியில் ஆசை ஏற்பட்டுள்ளது. அது அலையாய் தொடர்கிறது.
இந்த வேளையில், திமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு திமுக ஆட்சி அமைய சூளுரைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்டனர்.