

திருப்பூர் மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செலுத்த வேண்டிய, ரூ.23 கோடியே 67 லட்சம் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
2008-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் திருப்பூர், மாநகராட்சியாகச் செயல்படத் தொடங்கியது. 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அதேபோல், முத்தணம்பாளையம், முருகம்பாளையம், வீரபாண்டி உட்பட 8 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 60 வார்டுகளாக தற்போது செயல்பட்டு வருகிறது.
பின்னலாடைத் தொழில் நகரகமாக இருப்பதால், நாளுக்கு நாள் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத் தொழிலாளர்கள் வருகையால் தொடர்ந்து வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சியின் தெருவிளக்கு, குடிநீர் திட்டங்கள், மண்டல மற்றும் பிரிவு அலுவலகங்கள், மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 300 மின் இணைப்புகளுக்குக் கடந்த 2018-ம் ஆண்டு அக். மாதத்துக்குப் பின், தற்போது வரை மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மின்வாரியத்தினர் கூறுகையில், "தமிழகத்தில் திருப்பூர் மாநகராட்சி மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள அளவுக்கு, தமிழகத்தில் வேறெந்த மாநகராட்சியும் பாக்கி வைத்திருக்காது. திருப்பூர் மாநகராட்சிக்கு மின் கட்டணத்துக்கு வந்த தொகையை, பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதால், மின்வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படாமல் உள்ளது.
தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் எனப் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மின் இணைப்புடன் இருப்பதால், பாக்கி வைத்துள்ள பெரும் தொகையைக் காரணம்காட்டி இணைப்பைத் துண்டிக்கவும் முடியவில்லை. மாநகராட்சி தரப்பில் குடிநீர் மற்றும் வீட்டுவரி வசூல் ஆகவில்லை என்கின்றனர்.
மின்வாரியத்திலும் பல்வேறு செலவினங்கள் இருப்பதால், சமாளிப்பதற்குப் பெரும்பாடாகிவிடுகிறது" என்றனர்.
திருப்பூர் மின்வாரியச் செயற்பொறியாளர் ஜவஹர் கூறுகையில், "2018-ம் ஆண்டு அக். மாதத்துக்குப் பிறகு, மின் கட்டணம் செலுத்தவில்லை. ரூ.23 கோடியே 67 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். மாநகராட்சிக்கு சுமார் 300 இணைப்புகள் உள்ளன. மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மாநகராட்சிக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறுகையில், "திருப்பூர் மாநகராட்சிக்குப் பொதுமக்களிடம் இருந்து வர வேண்டிய வரி ஏராளமாக நிலுவையில் உள்ளது. கரோனா மற்றும் சிக்கன நடவடிக்கை காரணமாக 40 சதவீதம் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. நிதிநிலைமை சீரானதும், மின் கட்டணத்தொகை முழுமையாகச் செலுத்தப்படும்" என்றார்.