பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்தி வெளியிட்டால் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

பருவமழை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்தி வெளியிட்டால் நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை நிலவரம், அணைகள் திறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள மாநில அவசரகட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் வருவாய்த் துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையையொட்டி முதல்வர் பழனிசாமிஉத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பேரிடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அறிவுரை வழங்கநியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பருவ மழை, உபரி நீர் திறப்புதொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அவ்வாறு சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். வெள்ள உபரி நீர்வெளியேற்றம் தொடர்பாக அணைகள் மற்றும் ஏரிகளின் நிலவரங்களை அதிகாரிகள் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர். அந்த தகவல்கள் அடிப்படையில், அரசுதரும் அறிவிப்புகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 14,144 ஏரிகளில், 779 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டியதால் உபரிநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும்போது அடையாறு ஆற்றில் குறைந்த அளவு நீர் மட்டும் வெளியேற்றப்படும் சூழல் உள்ளது. மணிமங்கலம், சோமனூர் ஆகியஇடங்களில் தண்ணீர் அதிகமானாலும் அனைத்து சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம், வானிலை தகவல்களைதந்து கொண்டிருக்கிறது. அதன்அடிப்படையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி,பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in