

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 குறைந்து ரூ. 20 ஆயிரத்து 872க்கு விற்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 21 ஆயிரத்து 184 ஆக இருந்தது. இதனால் செவ்வாய்க் கிழமையன்று ரூ. 2648 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை , ரூ.39 குறைந்து புதன்கிழமையன்று ரூ. 2609க்கு விற்கப்பட்டது.
இதன்மூலம் கடந்த பத்து நாட்களில், முதல் முறையாக தங்கத்தின் விலை ரூ. 21ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. 17-ம் தேதி 21 ஆயிரத்து 960 ஆக இருந்த விலை, கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி 27-ம் தேதி 21 ஆயிரத்து 184 ஆக குறைந்தது. இடையில் மூன்று நாட்கள் மட்டுமே விலை சற்று ஏறியது. எனினும், புதன்கிழமை திடீரென மேலும் ரூ.312 குறைந்து, ரூ.20 ஆயிரத்து 872 ஆக இருந்தது.
இது குறித்து தமிழ்நாடு நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசகர் பாபு இமானுவல் கூறுகையில், “புதிய ஆட்சி அமைந்துள்ளதால், வரிகள் குறைந்து, தங்கத்தின் விலை குறைந்து விடுமோ என்ற பயத்தால், தற்போது கையிருப்பில் உள்ள தங்கம் சீக்கிரமாக விற்கப்படுகிறது. எனவேதான் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. எனினும், ரூ.2500க்கு கீழ் தங்கத்தின் விலை குறையாது” என்றார்.