

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா வரும் 21-ம் தேதி சென்னை வருகிறார். அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.67 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவே அவர் சென்னை வருவதாக கூறப்பட்டாலும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதே அவரது பயணத்தின் பிரதான நோக்கம் என்று கூறப்படுகிறது.
39 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழகம், பாஜகவுக்கு எப்போதும் சவாலாகவே உள்ளது. 1996 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்று முதல்முறையாக பேரவையில் நுழைந்தது. 2001 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் பாஜக வென்றது. அதன்பிறகு பேரவையில் பாஜகவுக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2016 பேரவைத் தேர்தலின்போது பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றும் முடியவில்லை.
இந்த சூழலில், ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் நடைபெறும் பேரவை தேர்தலில் எப்படியாவது 10-க்கும் அதிகமான எம்எல்ஏக்களை பெற்றுவிட வேண்டும் என்றநோக்கில் பாஜக செயல்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு, வி.பி.துரைசாமி என்று பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் வெல்ல முடியாது என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயங்குகிறது.
இதற்கிடையில், பாஜகவின் வேல்யாத்திரைக்கு அதிமுக தடை விதித்தது, தடையை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்துவது, ஆளுநரால் நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைத்தது ஆகியவை அதிமுக - பாஜக இடையிலான மோதல் போக்கின் அடையாளமாகவே தெரிகிறது.
இத்தகைய சூழ்நிலையில்தான் அமித்ஷா சென்னை வருகிறார். பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச இருக்கிறார்.
இதுபற்றி பாஜக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘‘கடந்த மக்களவை தேர்தலின்போது கூட்டணி, தொகுதி பங்கீட்டில் வேண்டுமென்றே பாஜகவை அதிமுக அலைக்கழித்தது. அதிமுக, பாமக,தேமுதிக, பாஜக, தமாகா, புதியதமிழகம், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமித்ஷா அறிவிப்பதாக இருந்தது. அதற்காக அவர் சென்னைவர தயாராக இருந்த நிலையில், அதிமுகவே கூட்டணியை அறிவித்தது. இந்த முறை கடைசிநேர இழுத்தடிப்பை அவர் விரும்பவில்லை. கூட்டணி உண்டா, இல்லையா என்பதை தெளிவுபட தெரிந்துகொள்ளவே சென்னை வருகிறார். கூட்டணிக்கு அதிமுக தயங்கினால், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலுவான 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்குவார்’’ என்றார்.
இன்னொரு பாஜக தலைவரிடம் பேசியபோது, ‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில்கூட பாஜகவுடன் மோதல் போக்கையே அதிமுக கடைபிடிக்கிறது. இதனால், தேர்தல் களத்தில் இணக்கமாக பணியாற்றுவது சந்தேகமே. தோல்வி அடைந்தாலும் பாஜக மீதுதான் அதிமுக பழிசுமத்தும். கடந்த மக்களவை தேர்தலிலும் அதுதான் நடந்தது. எனவே, அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டு, 2014 மக்களவை தேர்தல்போல 3-வது அணி அமைக்க வேண்டும் என்றும் பாஜகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதையும் மேலிடம் பரிசீலித்து வருகிறது’’ என்றார்.
அமித்ஷா வருகையால் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.