

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
அம்பாத்துரை அருகே முருகன்பட்டி என்ற இடத்தில் மலைக் குன்றுக்கு நடுவே ரயில் பாதை அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை காரணமாக மலைக் குன்றில் இருந்து நேற்று அதிகாலை பாறைகள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தன.
மதுரையில் இருந்து நேற்று காலை சென்னை புறப்பட்டுச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், கொடைரோடு ரயில்நிலையத்தைகடந்து சென்றபோது, முருகன்பட்டி மலைக் குன்றுகளுக்கு நடுவே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்திருப்பதை ரயில் ஓட்டுநர் பார்த்தார். இதையடுத்து ரயிலை நடு வழியில் நிறுத்தினார். தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பாறாங்கற்களை அகற்றினர். இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 7.55 மணிக்கு வர வேண்டிய ரயில், காலை 8.45 மணிக்கு வந்தது. அதன் பிறகு சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.