

தமிழக பாஜகவினர் கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரையை தொடர்ந்து மாவட்டந் தோறும் தடையை மீறி நடத்தி, கைதாகி வருகின்றனர். நேற்று கடலூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் முருகன் பேசியது: வேல் யாத்திரை அத்தியாவசியமானது. கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியிருக்கிறது. அந்த கருப்பர் கூட்டத்துக்கு பின்னால் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இருக்கின்றனர். அவர்களுடைய போலி முகத்தை மக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை நடக்கிறது.
மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்துக்கு அவர்கள் சரியான பாடம் கற்பிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் காணும் கனவு நிச்சயமாக நிறைவேறாது. அவரது கனவு கனவாகவே போய்விடும். தமிழக மக்கள் தக்கப் பாடத்தை புகட்டுவார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சுட்டிக்காட்டுபவரே கோட்டையில் முதல்வராக அமர முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகை குஷ்பு பேசியதாவது: பாஜகவுக்காக இந்த வேல் யாத்திரை நடக்கவில்லை. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காக நடக்கிறது. எந்தத் தடை வந்தாலும் வேல் யாத்திரை தொடரும். வரும் தேர்தலில் தமிழகத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது. நாம் அனைவரும் அதை பார்க்க போகிறோம். தமிழகத்தில் 2021-ம் தேர்லில் மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் ராகவன், மாவட்ட தலைவர்கள் இளஞ்செழியன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு வேல் யாத்திரை செல்ல முயன்ற எல். முருகன், அண்ணாமலை, நடிகை குஷ்பு உள்ளிட்ட 789 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜகவினரின் வெற்றிவேல் யாத்திரையையொட்டி கடலூர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.