

திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3-ம் நாளாக நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு வரை இடைவிடாது சாரல் மழை, கனமழை மாறிமாறி பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாராபுரத்தில் 68 மி.மீ. மழை
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருப்பூர் வடக்கு 40, தெற்கு 56, ஆட்சியர் அலுவலகம் 57, அவிநாசி 16, பல்லடம் 36, ஊத்துக்குளி 18.40,காங்கயம் 39, தாராபுரம் 68, மூலனூர் 28, குண்டடம் 30, திருமூர்த்தி அணை 37, அமராவதி அணை 32, உடுமலை 36.40, மடத்துக்குளம் 32, வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் 36.30, திருமூர்த்தி அணை (ஐ.பி) 36.80 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 598.90 மிமீ மழை பதிவானது. சராசரி 37.43 மிமீ ஆகும். மாவட்டத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் அதிக மழை பதிவானது.
கனமழையால் திருப்பூர்- அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம், தண்ணீர் பந்தல், அம்மாபாளையம் பகுதிகளில் சாலையில்மழைநீர் வெள்ளமாக ஓடியதால்வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். அதேபோல திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தற்காலிக பேருந்து நிலையப் பகுதியில், மழைநீருடன், சாக்கடைக் கழிவுநீரும்கலந்து தேங்கியதால்,பயணிகள் அவதியடைந்தனர். தற்காலிக பேருந்து நிலையத்தில் சாக்கடைஅடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் வீடுகள் சேதம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால், ஜல்லிபட்டி அடுத்த சந்தனக்கருப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் மற்றும் கலைஞர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழநி ஆகியோரின் வீடுகள் இடிந்தன. தொகுப்பு வீடு கட்ட அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருள்பட்டி பிரிவில் ரயில்வே சுரங்கப் பாதை வழியாக கண்ணம்மநாயக்கனூர், பெரியகோட்டை, மருள்பட்டி, ஜெ.ஜெ.நகர், கணேசாபுரம், வாணிநகர், சாதிக்நகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால், கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தகவலறிந்து வந்த ரயில்வே பொறியியல் துறையினர், தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கொப்பரை விலை உயர்வு
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 56 லட்சம் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கொப்பரை உற்பத்தி பரவலாகமேற்கொள்ளப்பட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் கொப்பரை தேங்காய் விலை கிலோ ரூ.121-ஐ எட்டியது, அதன்பின் படிப்படியாக குறைந்து ரூ.105-க்கு விற்பனையானது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால், தேங்காய் உற்பத்தி குறைந்ததால், கொப்பரை விலை அதிகரித்து கிலோ ரூ.121 ஆக உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கேத்தி உட்பட்ட பகுதிகளில் அதிக மழைபதிவாகியுள்ளது. உதகை-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்படுத்தினர்.
இதேபோல குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இரு ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 2 கடைகள் சேதமடைந்தன. குன்னூர் ஆரஞ்சு குரோவ் சாலை, டார்லிங்டன் பகுதியில் மின் மாற்றிகள் மீது மரம் விழுந்ததால், அங்குள்ள கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கின.
குன்னூர் அருகேயுள்ள பந்துமி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும் நர்சரிக்குள் தண்ணீர் புகுந்து, சுமார் 7 லட்சம் தேயிலை நாற்றுகள் சேதமடைந்தன. கடும் பனி மூட்டத்தால், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்கள் செல்வதைக்காண முடிந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வரும் நாட்களில் மழை அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் துறை சார்ந்த அலுவலர்களைக்கொண்டு 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டால் உடனுக்குடன் அகற்ற பொக்லைன் இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நீலகிரியில்உள்ள தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் உள்ள வீரர்கள் 50 பேர் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ) விவரம்: அதிகபட்சமாக குன்னூரில் 74 மிமீ மழை பதிவானது. உலிக்கல்-45, கோத்தகிரி-26.6, கோடநாடு-40, கீழ் கோத்தகிரி-37, அவலாஞ்சி-36, கிண்ணக்கொரை-33, குந்தா-25, எடப்பள்ளி-25, எமரால்டு-24, கெத்தை-24, உதகை -22.2, கேத்தி-19, கிளன்மார்கன்-10, பர்லியாறு-6 மழை பதிவானது. சராசரியாக மாவட்டத்தில் 19.41 மிமீ மழை பதிவானது.