

கரோனா தொற்று காலகட்டம் என்பதால் நீரிழிவு நோயாளிகள் நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தால் நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பச்சிளம் குழந்தைபராமரிப்பு வாரம் மற்றும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம்கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு வாரம் மற்றும் நீரிழிவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தசுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பச்சிளம் குழந்தை பராமரிப்பு கையேட்டை வெளியிட்டார். குழந்தைகளுக்கு மருந்துகள் மற்றும் நினைவுப் பரிசுகளும், நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக குளுக்கோமீட்டரும் வழங்கப்பட்டன. சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை டீன் பாலாஜி, ஆர்எம்ஓ ரமேஷ், துணை மருத்துவக் கண்காணிப்பாளரும் குழந்தைகள் நலப்பிரிவு இயக்குநருமான ஜே.கணேஷ், நீரிழிவு நோய் துறை இயக்குநர்சுரேஷ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பச்சிளம் குழந்தை பராமரிப்பு
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “இந்தியாவில் மற்றமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைபராமரிப்பு சிறப்பாக உள்ளது. இந்த மருத்துவமனையில் கரோனா பேரிடர் காலத்தில் 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு பிரத்யேக முறையில் பிரசவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 75 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் கரோனா தொற்றுடன் இணைந்தால் அதிகமான நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அதனால், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.