

பண்டிகை நாட்களையொட்டி சென்னையில் மெட்ரோ ரயில்களில் 6 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
மின்சார ரயில்களின் சேவைதொடங்காத நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சேவையை அதிகரித்தது. குறிப்பாக, தற்போது இயக்கப்பட்டு வரும் 2 வழித்தடங்களிலும் அதிகாலை 5.30மணிக்கே மெட்ரோ ரயில்சேவையை தொடங்கியது. இதேபோல், நள்ளிரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பயணித்தனர்.
அதன்படி, கடந்த 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 259 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த கட்டணம்
இது தொடர்பாக மெட்ரோரயில் பயணிகள் சிலர்கூறும்போது, ‘‘தீபாவளியின்போது சென்னையில் மழை பெய்தபோது, சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆட்டோ, கால் டாக்சிகளை ஒப்பிடும்போது கட்டணமும் குறைவாக இருக்கிறது. எனவே, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடியும்போது,சென்னையில் அடுத்தகட்டமுக்கிய போக்குவரத்து வசதியாக மெட்ரோ ரயில்சேவை மாறிவிடும்’’என்றனர்.