

ஆந்திர மாநிலம் - பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் விநாடிக்கு 400 கனஅடிஎன வெளியேற்றப்பட்ட உபரிநீர் ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திர மாநிலம் - நகரி அருகேஉருவாகும் ஆரணி ஆறு, தமிழகத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக பழவேற்காடு பகுதியில் வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது. இந்தஆற்றின் குறுக்கே ஆந்திரப்பகுதியில், பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் மற்றும் சுருட்டப்பள்ளி தடுப்பணை ஆகியவை உள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் - நந்தனம் மலைப்பகுதியில் கடந்த சிலநாட்களாக பெய்தமழைநீரால், ஊத்துக்கோட்டையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பியது.
அந்த நீர், நேற்று முன்தினம் முதல் தடுப்பணையில் இருந்து வழிந்து ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நீரோடு, தமிழகப் பகுதியில் பெய்தமழைநீரும் கலந்து, ஆரணி ஆற்றில்ஊத்துக்கோட்டைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இச்சூழலில், பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் நேற்று காலை நிலவரப்படி 1.52 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. ஆகவே, நேற்று காலை 10.15 பகல் 12 மணிவரை, அதாவதுசுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, விநாடிக்கு 400 கனஅடிஉபரிநீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட உபரிநீர், ஆந்திரப் பகுதி ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து, குறைந்த நேரத்துக்கு உபரிநீர் திறக்கப்பட்டதால், அந்த நீர் நேற்று மாலை நிலவரப்படி, மெதுவாகவே தமிழகப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.