

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த அதிமுக பகுதிச் செயலாளர் முருகேசன். இவரது மகன் மாரிகணேஷுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. பைக் ஓட்டுவதில் ஆர்வமுள்ள மாரிகணேஷ் கோவா, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்த பந்தயங்களில் பதக்கங்களை வென்றுள்ளார். இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு நவ.18-ல் தனது 31-வது வயதில் உயிரிழந்தார். மகன் மீது பாசம் வைத்திருந்த முருகேசன் ரூ.6 லட்சத்தில் மாரிகணேஷின் மெழுகுச் சிலையை அவனியாபுரத்தில் உள்ள தனது திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் நிறுவினார். நேற்று முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சிலைக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து முருகேசன் கூறுகையில், "எங்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மகனை மறக்க முடியவில்லை. எப்போதும் எங்களுடனேயே வாழ்ந்து வருவதாக இருக்க வேண்டும் எனக் கருதி ரூ.6 லட்சத்தில் மெழுகுச் சிலை நிறுவினேன். ஆண்டுதோறும் நினைவு நாளில் ஏழைகளுக்கு உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.