

கொடைக்கானலில் தொடர் மழையால் மலைச் சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஏரி நிரம்பியதால் திறந்துவிடப் பட்ட நீரால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவில், கொடைக்கான லில் அதிகபட்சமாக 94.6 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் ஏரி நிரம்பியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஏரி திறக்கப் பட்டது. இதில் வெளியேறிய உபரி நீர் வெள்ளி நீர்வீழ்ச்சியில் அருவியாகக் கொட்டியது.
ஏரிச் சாலையில் மழை நீர் தேங்கி கடைகளுக்குள் புகுந்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழையால் பல இடங்களில் புதிய அருவிகள் தோன்றின.
கொடைக்கானல்- வத்தல குண்டு மலைச்சாலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. இவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. மலைப் பகுதிகளில் பெய்த மழையால், மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.): திண்டுக்கல்-32.2, கொடைக்கானல்-94.6, பழநி-42, சத்திரப்பட்டி-44.2, நத்தம்-52.5, நிலக்கோட்டை-18.8, வேடசந்தூர்-84, காமாட்சிபுரம்-46.8 என மாவட்டத்தில் மொத்தம் 575.1 மி.மீ. மழை பதிவானது.