

போளூரில் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் மாற்றுப்பாதை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் அதிகப்படியான கிராமங்களை இணைக்கும் நகரப் பகுதியாக போளூர் உள்ளது. போளூர் நகரின் பிரதான சாலையான கடலூர்-சித்தூர் சாலையில் ரயில்வே ‘கேட்’ அமைந்துள்ளது. போளூர் ரயில் நிலையம் வழியாக காட்பாடி-விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்களால் ‘கேட்’ மூடப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போளூர் ரயில்வே ‘கேட்’ அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என் பது பல தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளாக இருந்து வந்தது.
பொதுமக்களின் தொடர் கோரிக் கைகளை ஏற்று கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் போளூர் ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், மேம்பாலப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. தொடர் முயற்சியால் கடந்த 2018-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.
போளூர் ரயில்வே மேம்பாலம் 648 மீட்டர் நீளம் கொண்டது. ரயில்வே மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் தூண்கள் அமைக்கப்பட்டு பாலம் கட்டுமானப் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதில், ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ள பகுதியில் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கரோனா ஊரடங்கால் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது.
தாமதமாகும் இணைப்பு சாலை
மேம்பாலம் கட்டுமானப் பணி களால் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தற்காலிக இணைப்புச் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இணைப்புச்சாலைக்கான ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்டபணிகள் கிடப்பில் உள்ளது. அதேபோல், அண்ணா சிலையில் இருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலை யும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள் ளனர். தற்போதைய நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் உள்ள பணிகளை 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க தீவிரம் காட்டி வருகின் றனர்.
அதேநேரம், நிலுவையில் உள்ள பணிகளையும் விரைந்து முடிப்பதுடன் ரயில்வே நிர்வாகமும் தங்களுக்கு உண்டான பகுதியில் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். கரோனா ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை முடித்து பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.