

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிமென்ட் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்ததால், அங்கு பேருந்துக் கக காத்திருந்த பயணிகள் அச்ச மடைந்தனர்.
திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெய லலிதா உத்தரவின் பேரில் ரூ.44 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டு, மாவட்ட பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நகராட்சி சார்பில் பேருந்து நிலைய வளாகத்தின் உள்ளே சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினசரி ஆயிரக் கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்வதால் பயணிகள் வசதிக்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் ஷீட்களால் மேற்கூரை அமைக்கப்பட்டது.
சிமென்ட் ஷீட்டுகள் தரமாக அமைக்கப்படாததால், பலமாக வீசும் காற்றுக்கும், கனமழைக்கும் சிமென்ட் ஷீட்டுகள் ஒவ்வொன்றாக கழன்று கீழே விழுந்து வருவதாக பயணிகளும், வியாபாரிகளும் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் நகர பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மழை பெய்ததால் சிமென்ட் ஷீட்டுகள் போடப்பட்ட இடத்தில் ஓரமாக பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென சிமென்ட் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது. இதைக்கண்ட பயணிகள் அலறிய டித்தபடி வெளியே ஓடினர். இத னால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.