Last Updated : 18 Nov, 2020 06:37 PM

 

Published : 18 Nov 2020 06:37 PM
Last Updated : 18 Nov 2020 06:37 PM

திருப்பத்தூர் அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே திரியாலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே திரியாலம் கிராமத்தில் கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால நடுகல் மற்றும் சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி பேராசிரியர் பிரபு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த திரியாலம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கள ஆய்வு நடத்தினர். அப்போது, மண்டபம் என்ற இடத்தில் ஒரு நடுகல், ஒரு சதிக்கல் இருப்பதைக் கண்டெடுத்தனர்.

திருப்பத்தூர் அருகே திரியாலம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்.

இதுகுறித்துப் பேராசிரியர் பிரபு கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் எண்ணற்ற தொல்லியல் தடயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த திரியாலம் அருகேயுள்ள மண்டபம் என்ற சிறிய கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகில் நடுகல் இருப்பதைக் கள ஆய்வின்போது கண்டறிந்தோம். இக்கல்லானது 5 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

நடுகல்லில் உள்ள வீரன் தனது வலது கையில் வாளும், இடது கையில் வில், அம்பும் பிடித்தபடி உள்ளார். 3 ஆபரணங்களை அணிந்துள்ளார். தனது தலையில் தலைப்பாகையினைச் சூடியுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த வீரன் படைத்தளபதியாக இருக்கக்கூடும்.

வீரனது முகம் கோபமாகக் காட்டுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 அடுக்குகளைக் கொண்ட காப்பினை 2 கைகளின் மேற்புறத்திலும், 4 அடுக்குகளைக் கொண்ட காப்பினை மணிக்கட்டுகளிலும் அணிந்துள்ளார். வீரரின் கால்களில் வீரக்கழல் காணப்படுகின்றன. காதுகளில் பத்தரகுண்டலம் அணிந்துள்ளார்.

இடுப்பில் இடைக்கச்சுடன் சிறிய கத்தி காணப்படுகிறது. வீரர் எதிரிகளிடம் சண்டையிடும்போது உயிர் துறந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. எனவே, வீரரின் வீரச்செயலைப்போற்றும் விதமாக இந்நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் இந்தக் கல்லினை 'வேடிப்பன்' என அழைக்கின்றனர்.

இந்த நடுகல்லுக்கு அருகாமையில் ஒரு பெண்ணுருவம் பொறிக்கப்பட்ட சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இந்தச் சிற்பம் மூன்றரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

பெண் தனது வலது கையில் மலர்ச்செண்டினை ஏந்தியவாறு காணப்படுகிறாள். அவளது முகம் சோகத்தைப் பிரதிபலிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலங்களில் போருக்குச் செல்லும் ஆண்களுக்குப் பெண்கள் மலர்ச்செண்டினைக் கொடுப்பது போரில் வெற்றியுடன் திரும்புக என்று வாழ்த்தி வழி அனுப்புவது வழக்கமாக இருந்தது.

அதன்படி பார்த்தால் இங்குள்ள நடுகல்லில் இருப்பது, வீரரின் மனைவியாக இப்பெண் இருக்கக்கூடும். வீரர் மறைந்த உடன் அவரது மனைவியும் உயிர் துறந்திருக்கக்கூடும். எனவே, வீரருக்கு அருகாமையில் அவரது மனைவியின் சிற்பமும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லானது கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அதாவது பிற்காலச் சோழர்காலத்தைக் கலைப்பாணியில் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரரும், அவரது மனைவியும் அணிந்துள்ள ஆபரணங்கள் சோழர் காலத்துக் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இவை சோழர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

நடுகல்லில் வீரர் பிதுங்கிய கண்களுடன் காட்சிப்படுத்திய பாங்கு சிறப்புக்குரியதாகும். வீரரது நெற்றியில் பட்டை பூசப்பட்டுள்ளதால் இவர் ஒரு சிவ பக்தர் என்பதையும் அறியமுடிகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றுப் பின்புலத்தினை எடுத்துக்காட்டுவதாக இந்த நடுகல் அமைந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x