Last Updated : 18 Nov, 2020 05:40 PM

 

Published : 18 Nov 2020 05:40 PM
Last Updated : 18 Nov 2020 05:40 PM

சிறுமுகை அருகே விதி மீறி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; தோட்ட உரிமையாளர் கைது

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆண் யானை.

கோவை

சிறுமுகை அருகே விதி மீறி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழக்கக் காரணமாக இருந்த தோட்டத்தின் உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை வனப்பகுதிக்கு அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இன்று (நவ.18) காலை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவம் நடைபெற்ற தோட்டத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் அறையிலிருந்து மின்சாரம் திருடப்பட்டுச் சுற்றி இருக்கும் வேலியில் செலுத்தப்பட்டதைக் கண்டறிந்தனர். உடனடியாகத் தோட்டத்தின் உரிமையாளர் முருகேசனை (40) வரவழைத்து விசாரித்தனர்.

காட்டுப்பன்றிகள் தோட்டத்துக்குள் நுழைவதைத் தடுக்க வேலிக்குத் திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்துக்கு முருகேசனை அழைத்து வரும்போது புத்துக்காடு கிராம மக்கள் வனத்துறை வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் புதுக்காடு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், வனத்துறையினர் முருகேசனைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விதி மீறி மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் மின்வாரிய அதிகாரிகளும் தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x