

மதுரையில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்து சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியும், தெப்பம்போல் தண்ணீர் தேங்கியும் பழமையான கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு ஒரு சொட்டு மழைநீர் வராமல் தற்போதும்கூட வறண்டு போய் கிடக்கிறது.
மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள பழமையான கோயில் கூடலழகர் பெருமாள் கோயில்.
இக்கோயில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம் பெருமையுடையது. வைணவ சான்றோர்களான ஆழ்வார்களால் பாடப்பட்ட தலம் இதுவாகும். முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையைக் கொண்டது.
இந்தக் கோயில் தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை போல் நீண்ட வரலாறும், பெருமையும் கொண்டது. இந்த தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தெப்பக்குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் வருவது தடைபட்டது. அதனால், தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்பத்திருவிழாவும் நிலை தெப்பமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 60 ஆண்டுகளாக இந்த தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை இந்து அறநிலையத்துறை அதிகாிரகள் அகற்றினர். மாநகராட்சியும், பெரியார் பஸ்நிலையம், டவுன் ஹால் ரோடு உள்ளிட்டப்பகுதியில் இருந்து இந்த தெப்பக்குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.
ஆனால், அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமலே மாநகராட்சி பாதியிலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால், சிறிதளவு மழைநீர் கடந்த சில மாதம் முன் வந்தது. தற்போதும் அதுவும் வருவது நின்றுவிட்டது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் மதுரையில் கடந்த சில நாளாக அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. பெரியார் பஸ்நிலையம் பகுதி வழக்கம்போல் தெப்பம் போல் கால் முட்டளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. டவுன் ஹால் ரோட்டிலும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இப்பகுதிகளில் இருந்து மாநகராட்சி கூறியது போல் மழைநீர் ஒரு சொட்டு கூட கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை.
அதனால், அடைமழையால் மதுரையே மழை நீரில் தத்தளித்தப்போம் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் தண்ணீரில்லாமல் வழக்கம்போல் வறண்டுபோய் கிடக்கிறது. மாநகராட்சி இந்தத் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எந்த மழைநீர் கால்வாயை தூர்வாரினார்கள் என்று தெரியவில்லை.
பெரியார் பஸ் நிலையம் பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக இருப்பதால் அந்தத் தண்ணீரைக் கொண்டு வருவதற்குதான் மாநகராட்சி கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாய்களைக் கூறியதாகத் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் கூறியபடி ஒரு சொட்டு மழைநீர் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வராததால் பொதுமக்கள், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகமும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் தாமதம் செய்யாமல், நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி பராம்பரியமான பழமையான கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் நடப்பதால் சில இடங்களில் தண்ணீர் வராமல் தடைப்பட்டிருக்கலாம். அதை விரைவாக சரி செய்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றனர்.