

மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அல்ட்ரா நியூரோ சோனாகிராம் ஸ்கேன் செய்வதற்கு தினமும் பெற்றோர்கள் முகக்கவசம் கூட அணியாமல் அதிகளவில் குவிவதால், அந்தக் குழந்தைகளுக்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தலைப்பகுதியில் ஏதாவது கட்டியிருந்தால் அதை கண்டுபிடிக்க அல்ட்ரா நியூரோ சோனாகிராம் ஸ்கேன் (neurosonogram scan) செய்து மருத்துவர்கள் பார்ப்பார்கள்.
மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய இந்த ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கரோனா பரவும் காலம் என்பதால் மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்து, கைகழுவதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையிலே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால், பச்சிளம் குழந்தைகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் பார்க்கப்படும் ஸ்கேன் மையம் பகுதியில் மட்டும் கரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள், அல்ட்ரா ஸ்கேன் எடுக்க வருகின்றனர். அவர்கள் யாரும் பெரும்பாலும் முகக்கவசம் கூட அணிவதில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவதில்லை.
கும்பலாக ஒரே பகுதியில் அவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் அமர இடமில்லாமல் ஸ்கேன் மைய வரண்டாவில் மற்ற நோயாளிகளுடன் ஸ்கேன் எடுக்கும் வரை அமருகின்றனர்.
பச்சிளம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அவர்களை பாதுகாப்பு இல்லாமல் இப்படி வைத்திருப்பதால் அந்த குழந்தைகளுக்கு கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்கேன் மையம் மருத்துவர்களிடம் கேட்டபோது, ‘‘தேவையுள்ள குழந்தைகளுக்கு மட்டும் அல்ட்ரா ஸ்கேன் எடுக்க பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரை செய்யலாம்.
ஆனால், ரத்தப்பரிசோதனை செய்வது போல் இந்தத் தொற்று நோய் பரவும் காலத்திலும் அனைத்து குழந்தைகளுக்கும் பெரும்பாலும் ஸ்கேன் எடுக்க அனுப்பி விடுகின்றனர்.
இதற்காக ஸ்கேன் மையத்தில் மணிக் கணக்கில் பெற்றோர்கள் வரிசையில் காத்திருப்பதோடு, ஸ்கேன் எடுக்கவும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகும்.
அதனால், உண்மையாகவே நோய் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க காத்திருக்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது. ஸ்கேன் எடுக்க வருவோர் ஸ்கேன் எடுப்பதிலேயே மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
நோய் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை. அதனால், அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கும், மற்ற மருத்துவப் பணியாளர்களுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது’’ என்றனர்.