Published : 18 Nov 2020 04:27 PM
Last Updated : 18 Nov 2020 04:27 PM

விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் ஏற்படுத்தக் கோரிக்கை

ஆறுபாதி ப.கல்யாணம்

நாகப்பட்டினம்

விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம் தமிழக அரசின் வேளாண்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கோரிக்கைக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதற்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்ய இம்மாதம் 30-ம் தேதி கடைசி நாள் என்பதால் நேரடி ஆன்லைன் மையங்களில் கூட்டம் அதிகமாகி, விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசுடமை வங்கிகள், பயிர்க் காப்பீடு செய்வது கட்டாயம் கிடையாது என்பதைக் காரணம் காட்டி பயிர்க் காப்பீடு பிரீமியத்தை, தாங்கள் கடன் வழங்கும் விவசாயிகளைக்கூட வெளியில் ஆன்லைன் சேவை மையங்களில் செலுத்தச் சொல்கிறார்கள். தங்களுக்கு வேலைப்பளு இருப்பதாகத் தட்டிக் கழிக்கின்றனர். கடன் வழங்கும் வங்கிகள் இதைப் போல செய்வதால், ஆன்லைன் மையங்களை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெறாத விவசாயிகள் அந்த வங்கிகளில் சம்பா, பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த முடியவில்லை. இப்படி எல்லா வங்கிகளும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிப்பதால் விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

ஐ.எப்.எஸ்.சி கோடு இல்லாத வங்கிகள் மூலம் பிரிமீயம் செலுத்த முடியாது என்ற விதி தளர்த்தப்பட வேண்டும். இது இயலவில்லை எனில் ஒவ்வொரு தொடக்கக் கூட்டுறவு வங்கியிலும், தற்காலிக ஆன்லைன் சேவை மையங்கள் செயல்பட இடமளித்து இதன் மூலம் செலுத்த வழி வகை செய்ய வேண்டும். உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகத்திலும், வேளாண்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தற்காலிக ஆன்லைன் சேவை மையங்களை ஏற்படுத்தலாம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்ய இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் சம்பா பயிர்க் காப்பீடு செய்ய உதவுமாறு வேளாண்மைத் துறைச் செயலாளர், ஆணையர் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களை வேண்டுகிறோம்."

இவ்வாறு ஆறுபாதி ப. கல்யாணம் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x