குண்டாறு அணையில் 99 மி.மீ. மழைப் பதிவு: கடனாநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பின- குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு

குண்டாறு அணையில் 99 மி.மீ. மழைப் பதிவு: கடனாநதி, கருப்பாநதி அணைகள் நிரம்பின- குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு
Updated on
2 min read

தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் ஆரம்பத்தில் ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 99 மி.மீ. மழை பதிவானது.

ராமநதி அணையில் 95 மி.மீ., சிவகிரியில் 81 மி.மீ., கடனாநதி அணையில் 73 மி.மீ., தென்காசியில் 72 மி.மீ., செங்கோட்டையில் 71 மி.மீ., கருப்பாநதி அணையில் 62 மி.மீ., ஆய்க்குடியில் 60.06 மி.மீ., அடவிநயினார் அணையில் 58 மி.மீ., சங்கரன்கோவிலில் 48 மி.மீ. மழை பதிவானது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் சீறிப் பாய்ந்தது. குற்றாலநாதர் கோயிலில் வெள்ளம் புகுந்தது. கோயில் அருகில் உள்ள கடைவீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இதுவரை கண்டிராத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக குற்றாலம் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். வெள்ளத்தில் மரக்கட்டைகள், கற்கள் அடித்து வரப்பட்டன. பிரதான அருவி அருகில் உள்ள தடுப்புக் கம்பிகள், பெண்கள் உடை மாற்றும் அறை ஆகியவை சேதம் அடைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மண் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தன. இன்று 3-வது நாளாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

கனமழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குண்டாறு அணை மட்டும் நிரம்பியிருந்த நிலையில், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை, 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை ஆகியவையும் நிரம்பின. கடனாநதி அணையில் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 83 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலையில் அணைக்கு விநாடிக்கு 1387 கனஅடி நீர் வந்தது. நீர் வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டது.

கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.59 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, நீர் வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்த அணைக்கு விநாடிக்கு 403 கனஅடி நீர் வந்தது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 452 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ராமநதி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் நான்கரை அடி உயர்ந்து 101.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 140 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் நீர்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்ல வேண்டாம். கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினை முழுவீச்சில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in