அமைச்சர் சி.வி.சண்முகத்தால் போடப்பட்ட பொய் வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி பதில்

பொன்முடி - அமைச்சர் சி.வி.சண்முகம்: கோப்புப்படம்
பொன்முடி - அமைச்சர் சி.வி.சண்முகம்: கோப்புப்படம்
Updated on
1 min read

அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகப் போடப்பட்ட வழக்கு, அமைச்சர் சி.வி.சண்முகத்தால் போடப்பட்ட பொய் வழக்கு என, முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், திமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி எம்எல்ஏ இன்று (நவ.18) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வகையில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று பதில் அளித்துள்ளார். ஸ்டாலின் அறிக்கையில் அரசு நிலம் ஒப்பந்தம் விடப்பட்டதில் எம்எல்ஏ சக்ரபாணி மகன் கலந்துகொண்டு ஒப்பந்தம் எடுத்தது குறித்துக் கூறியுள்ளார். ஆனால், சி.வி.சண்முகம் வேண்டுமென்றே என்னைப் பற்றிப் பேசியுள்ளார். பொய் வழக்குப் போட வைத்ததே இவர்தான்.

பட்டா நிலத்தில் செம்மண் எடுக்க அனுமதி கேட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வானூர் வட்டாட்சியரை மிரட்டி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக என் மேல் வழக்குத் தொடுக்க வைத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என் மேல் வழக்குப் போட வாய்ப்பே இல்லை. குவாரி வழக்கைக் கனிமவளத்துறைதான் பதிய முடியும். வருவாய்த்துறை வழக்குப் பதிய முடியாது. என் மேல் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லை. அதிமுகவில் உள்ள உட்கட்சிப் பூசல் போல திமுகவை நினைத்துவிட்டார். திமுக தலைமைக்குக் கட்டுப்பட்ட இயக்கம். எந்தக் கட்சியில் உட்பூசல் உள்ளது என்று மக்களுக்குத் தெரியும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தன் கட்சிக்காகத் தமிழகம் வருகிறார். அது இயற்கை. இதில் எதுவும் சொல்வதற்கில்லை.

அரசு ஒப்பந்தங்கள் எல்லாம் தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு வேண்டியவர்களுக்கே வழங்கப்படுகிறது. இதைத்தான் ஸ்டாலின் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்று சொல்லியுள்ளார். இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்".

இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.

ஜனவரி - பிப்ரவரியில் தன் முடிவை அறிவிப்பதாக மு.க.அழகிரி சொல்லியுள்ளாரே என்ற கேள்விக்கு, "அவர் கட்சியிலே இல்லை. அதனால் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று பொன்முடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in