

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரை கூட்டத்தில் குஷ்பு பேசினார்.
கடலூரில் இன்று (நவ. 18) வேல் யாத்திரை நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்திருந்தார். வேல் யாத்திரைக்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். தடையை மீறி வேல் யாத்திரை செல்வோர் கைது செய்யப்படுவார்கள் என்று கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தெரிவித்திருந்தார். கடலூர் நகரம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நண்பகல் 12 மணிக்கு கடலூரில் பாஜக சார்பில் வேல் யாத்திரை கூட்டம், மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கோட்டப் பொறுப்பாளர் ராகவன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் குஷ்பு பேசியதவது:
"மோடி தமிழகம் வரும்போது தமிழில் பேசுகிறார். திருக்குறள் சொல்கிறார். தமிழகத்தில் 2021-ம் தேர்லில் மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும். கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு நான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தபோது போலீஸார் நடுவழியில் தடுத்து நிறுத்தி என்னைக் கைது செய்தனர்.
இன்று கடலூர் வரும்போது மதுராந்தகம் அருகே விபத்து ஏற்பட்டு தப்பி வந்துள்ளேன். இதற்கு முருகன் அருள்தான் காரணம். எனது கணவர் முருக பக்தர். அவர் வெளியே செல்லும்போது முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்.
இந்த வேல் யாத்திரை பாஜகவுக்காகவா? இல்லை. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்காகத்தான். நம்மைப் பார்த்து எதிரணியினர் பயப்படுகின்றனர். இந்த வேல் யாத்திரை டிசம்பர் மாதம் 7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது. அதில் நானும் கலந்துகொள்வேன். தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது. நாம் அனைவரும் பார்க்கப் போகிறோம்".
இவ்வாறு குஷ்பு பேசினார்.
இதையடுத்து, தடையை மீறி வேல் யாத்திரை கூட்டம் நடத்தியதற்காக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், கோட்டப் பொறுப்பாளர் ராகவன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு, மாவட்டத் தலைவர்கள் இளஞ்செழியன், மணிகண்டன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.