கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

2020-2021 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (நவ.18) சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 3 புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், சேலம் தலைவாசலில் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கட்டிடப் பணிகள் ஏறத்தாழ 60% நிறைவு பெற்றிருக்கின்றன.

இந்த ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள், 24-10-2020 முதல் 09-11-2020 வரை இணையதளம் மூலமாகப் பெறப்பட்டன. அதில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலமாக பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் 12 ஆயிரத்து 477. இதில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 11 ஆயிரத்து 246.

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப்படிப்புக்குப் (தொழிற்கல்வி) பெறப்பட்ட விண்ணப்பங்கள் 163. இதில் தகுதி பெற்றவை 137. பி.டெக் உணவு தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 15 ஆயிரத்து 580 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில், 13 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள மாணவர்களின் பெயர்களை வெளியிடுகிறேன். அதேபோன்று, தகுதிபெற்ற மற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியலை www.tanuas.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். இணையதளக் கலந்தாய்வு எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 இல் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள் விவரம்:

1. பிஷ்னு மாயா, கன்னியாகுமரி, 199.25

2. சுந்தர், சேலம், 198.5

3. கோகிலா, கோயம்புத்தூர், 197.51

4. மோகன வெங்கடேஷ், தருமபுரி, 197.50

5. நவீன் நந்தா, கிருஷ்ணகிரி, 197.26

பி.டெக் பட்டப்படிப்புகளில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள், கட் ஆஃப் மதிப்பெண்கள்

1. சிவகனி, தருமபுரி, 192

2. ரித்திக், நாமக்கல், 192

3. நிவேதா, விழுப்புரம், 191.5

4. ஜெகதீப் எட்வின், கன்னியாகுமரி, 191

5. அனுஷா, விழுப்புரம், 191".

இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in