

கடலூரில் பாஜக வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு அதன் தலைவர் முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்காததால் யாத்திரை நடைபெறும் இடங்களில் அதில் பங்கேற்போரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இருந்த போதிலும் தடையை மீறி யாத்திரையை மாநிலத் தலைவர் முருகன் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று (நவ.18) நண்பகல் 12 மணிக்கு கடலூரில் வேல் யாத்திரை மேற்கொள்வதாக பாஜக சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி யாத்திரை நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் கடலூரில் குவிந்து வருகின்றனர். கடலூர் நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்பேத்கர் சிலையைச் சுற்றிலும் பேரிகார்டு அமைத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடலூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.