நவ.20-ம் தேதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் நேற்று (நவ. 17) வெளியிட்ட அறிவிப்பு:

"அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக தலைமைக் கழகத்தில் வரும் 20-ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை, 4.30 மணிக்கு, அதிமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 21-ம் தேதி, பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வருகை தருகிறார். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அவரது வருகை முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமித் ஷா, தமிழக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் எனத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அதிமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் அமித் ஷா வருகையின்போது நடைபெறலாம் எனக் கூறப்படும் நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in