

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சரணடைந்த யுவராஜின் போலீஸ் காவல் முடிந்த நிலையில், அவரை வேலூர் சிறையில் அடைக்க நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், கடந்த 11-ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை கடந்த 12-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் நீதிமன்ற அனுமதி பெற்று 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கடந்த 17-ம் தேதி நீதிமன்றத்தில் யுவராஜை ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீஸார் மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்தனர். கடந்த 2 நாட்களாக நடந்த விசாரணையின்போது யுவராஜ் முன்னுக்குபின் முரணான பதிலே அளித்து வந்ததாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
காவல் முடிந்து நேற்று மாலை யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, யுவராஜ் தரப்பில், கோவை சிறையில் அடைக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சிபிஐடி போலீஸார் மதுரை அல்லது திருச்சி சிறையில் யுவராஜை அடைக்க வேண்டும் என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலர்மதி, நவம்பர் 2-ம் தேதி வரை யுவராஜை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறைக்கு யுவராஜை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.