

தீபாவளிப் பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளதால் இனிவரும் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை கடந்த 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முன்பாக சில நாட்களாக புதிய ஆடைகள், அணிகலன்கள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடை வீதிகளில் மக்கள் அதிக அளவில் கூடினர். குறிப்பாக, தீபாவளிக்கு முந்தைய நாள் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங் களில் உள்ள கடைகளில் கூட்டம் அலை மோதியது. மக்களில் பலர் முகக்கவசம் அணியவில்லை. இதனால், கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட் சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேநேரத்தில் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண் டும். முகக் கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவர்கள், கரோனா அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது.
கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடக் கும் இடங்கள், தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண் காணித்து நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில நாட்களாக கட்டுமானப் பகுதிகளில் கரோனா தொற்று பரவுகிறது.
தஞ்சாவூர் மற்றும் சென்னை தண் டையார்பேட்டையில் கட்டுமானப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறியப் பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள உள் கட்டமைப்பு வசதிகளை குறைக்கக் கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந் துள்ளதால் இனிவரும் 14 முதல் 28 நாட்கள் மிகவும் முக்கியமானவை. வெளி மாநிலங் களில் இருந்து வருபவர்களை கண் காணிக்க வேண்டும். வரும் நாட்களில் கரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித் துள்ளார்.
புதிதாக 1,652 பேர்
இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 1,652 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,032, பெண் கள் 620 என மொத்தம் 1,652 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 492, கோவை யில் 170, செங்கல்பட்டில் 112 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 59,916 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 34,970 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,314 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 15,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 12 பேர் என நேற்று 18 பேர் உயி ரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,513 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை யில் 2 லட்சத்து 9,646, கோவையில் 46,757, செங்கல்பட்டில் 46,146, திருவள்ளூரில் 39,797 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நில வரம் உள்ளது. 212 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 99,077 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று 62,415 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொற்று இல்லாத மாவட்டம்
தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2,228 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்றின் தீவிரத்தால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் புதிதாக யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.