பருவமழையின்போது அதிகம் பாதிக்கப்படும் 4,133 இடங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த கையேடு மற்றும் அவசரகால தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். உடன் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா,  வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திரரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோர். படம்: பு.க.பிரவீன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த கையேடு மற்றும் அவசரகால தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். உடன் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திரரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் ஆகியோர். படம்: பு.க.பிரவீன்
Updated on
2 min read

தமிழகத்தில் பருவமழையின்போது 4,133 பகுதிகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டு, அங்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்பு அலுவலர்களுக்கு பயனளிக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் அடங்கிய கையேடு, அவசரகால தொலைபேசி எண்கள் கையேடு ஆகியவற்றை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அக்டோபர் முதல் டிசம்பர் வரை, குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். கடந்த அக்.28-ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் நவ.16-ம் தேதி வரை 180.7 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 37 சதவீதம் குறைவாகும். சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பாகவும், 31 மாவட்டங்களில் அதைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது.

கடந்தகால நிகழ்வுகள், தகவல்கள் அடிப்படையில் தமிழகத்தில் மொத்தம் 4,133 பகுதிகள்பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இவை மிக அதிக பாதிப்பு 321, அதிக பாதிப்பு 797, மிதமான பாதிப்பு 1,096, குறைவான பாதிப்பு 1,919 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்க 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என 4,680 இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை அளிக்கவும், தேடுதல், மீட்பு, பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்துமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்ற 14,232 பெண்கள் உட்பட 43,409 முதல்நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல்நிலை மீட்பாளர்கள், காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்ற, மரங்களை நட்டு வளர்க்க 9,909 முதல்நிலை மீட்பாளர்களும் உள்ளனர். பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 691 பேர், 4,699 தீயணைப்பு வீரர்கள், 9,859 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர்.

அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1077), டிஎன் ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு, அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர்குறித்த தகவல்களை தெரிவிக்கநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆறு, கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளில் நின்று செல்ஃபி எடுப்பதோ, தேவையில்லாத சாகசங்கள் செய்வதோ கூடாது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகந்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in