

துணைவேந்தர் சுரப்பா மீதான குற்றச்சாட்டுகளில் உரிய முகாந்திரம் இருந்தால் நேரடி விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று நீதிபதி பி.கலையரசன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பாமீது 280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை அதிகாரியாக முன்னாள் நீதிபதி பி.கலையரசன் கடந்த நவ.13-ம் தேதி தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார். மேலும், விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி கலையரசன் நேற்று முன்தினம் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டு, தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக நீதிபதி கலையரசன் கூறியதாவது:
அலுவலக ஒதுக்கீடு செய்யப்பட்டதும் விசாரணை பணிகள் தீவிரப்படுத்தப்படும். அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுரப்பா மீதுகுற்றச்சாட்டு இருந்தால் புகார்அளிக்கலாம் என நான் கூறவில்லை. அதேநேரம், யாரேனும் உரிய ஆதாரங்களுடன் புகார்அளித்தால் கட்டாயம் பரிசீலிக்கப்படும். மேலும், சுரப்பா மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தப்படும்.
அதில் உரிய முகாந்திரம் இருந்தால் சம்மன் அனுப்பி நேரடி விசாரணைக்கு அழைக்கப்படுவார். சுரப்பா பதவியேற்ற நாள்முதல், நடந்த நிகழ்வுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும். சுரப்பா மூலம் பணி நியமனம் பெற்றவர்களும் விசாரிக்கப்படுவர். தேவைப்பட்டால் சுரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடந்த நியமனங்கள் குறித்தும் விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.