Last Updated : 18 Nov, 2020 03:13 AM

 

Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் மூடல்: 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் காலாவதியானது

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், விடுதிகளில் இருப்பில் உள்ள சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மளிகைப் பொருட்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதி காப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கிப் பயில தமிழகத்தில் 1,099 விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 255 விடுதிகளும் உள்ளன. இவற்றில் மாணவ, மாணவிகள் சுமார் 85,914 பேர் வரை தங்கிப் பயின்று வந்தனர்.

இதேபோல், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1.135 விடுதிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 1,324 விடுதிகளும் உள்ளன. இவற்றில் மாணவ, மாணவிகள் சுமார் 1,45,340 வரை பேர் தங்கிப் பயின்று வந்தனர்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விடுதிகள் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டன. இந்நிலையில், மாணவ, மாணவிகளின் உணவுத் தேவைக்காக, விடுதிகளில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, எண்ணெய், மிளகு, சீரகம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இதில், அரிசி மூட்டைகள் தமிழ்நாடு உணவுப் பொருள் சேமிப்புக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மளிகைப் பொருட்கள் விடுதிகளில் இருப்பில் இருந்தன. இவை தற்போது பயன்படுத்த முடியாமல் கெட்டுவிட்டதாக, விடுதி காப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விடுதி காப்பாளர்கள் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கான விடுதிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வரை மளிகைப் பொருட்கள் இருப்பு இருக்க வாய்ப்புள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளில் மளிகைப் பொருட்கள் இருப்பு மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும். விடுதிகளில் தற்போது இருப்பில் உள்ள மளிகைப் பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை விதிகளின்படி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் உள்ள காலாவதியான மளிகைப் பொருட்கள் தொடர்பான பட்டியல், விடுதி காப்பாளர்களிடம் இருந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தால் பெறப்பட்டுள்ளது. சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மளிகைப் பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x