

நீலகிரி மாவட்டம் நஞ்சநாட்டைச் சேர்ந்தவர் ஹிந்தேஷ் ஆனந்த்(33). கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
கோவை வடவள்ளி அருகேயுள்ள ஓணாப்பாளையத் தில், ஹிந்தேஷ் ஆனந்துக்கு சொந்தமான 15 சென்ட் இடம் உள்ளது. இதைப் பார்க்க அவர் நேற்று முன்தினம் வடவள்ளிக்கு வந்தார். நிலத்தை பார்வையிட்ட பின்னர், தன்னிடம் இருந்த ரூ.1 லட்சத்துக்கு 20 ஆயிரம் தொகையை, டெபாசிட் செய்ய அதே பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சென்றார். அங்குள்ள இயந்திரத்தில் தொகையை செலுத்தினார். அதில் 40 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் செலுத்த முடியவில்லை.
அந்தத் தொகையை மட்டும் வங்கியில் இருந்த காசாளரிடம் கொடுத்து தனது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான படிவத்தையும் அளித்தார். காசாளர் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிப் பார்த்தபோது, அது கள்ளநோட்டு எனத் தெரிந்தது.
இதையடுத்து அவர் வடவள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஹிந்தேஷ் ஆனந்திடம் விசாரித்தனர். அப்போது, ‘‘ஊட்டியைச் சேர்ந்த மதன்லால் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் தொகை கடன் வாங்கியிருந்தேன். அவர் அளித்த தொகையைத்தான் வங்கியில் செலுத்த வந்தேன்” என ஹிந்தேஷ் ஆனந்த் கூறியுள்ளார். இதையடுத்து மதன்லாலை பிடித்து விசாரிக்க, ஹிந்தேஷ் ஆனந்தை அழைத்துக் கொண்டு போலீஸார் ஊட்டிக்கு சென்றுள்ளனர்.