

பழங்கால சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் அருங்காட்சியக அதிகாரி, ஊழியர்கள், தனியார் பாதுகாவலர்கள் ஆகியோரிடம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்கால பைரவர் சிலை திடீரென மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பைரவர் சிலையை போலவே அருங்காட்சியகத்தில் இருந்து மேலும் பல சிலைகள் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
காவல் துறையினரால் மீட்கப்படும் பெரும்பாலான சிலைகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சிலைகளிலும் பல மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சிலைகள் மாயமானது குறித்து எழும்பூர் அருங்காட்சியக அதிகாரி, சிலைகளை பராமரிக்கும் ஊழியர்கள், அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘பலத்த பாதுகாப்பு உள்ள எழும்பூர் அருங்காட்சியகத்தில் இருந்து எளிதாக சிலைகளை திருட முடியாது. அருங்காட்சியகத்தில் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடனே சிலைகளை திருட முடியும். இதனால்தான் ஊழியர்களிடம் முதலில் விசாரணை நடத்தினோம்’’ என்றனர்.
சிலைகள் மாயமானது குறித்துஅங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 2 மாதத்துக்கு ஒருமுறை இந்த காட்சிகள் தானாக அழிந்துவிடும் என்பதால், அழிக்கப்பட்ட காட்சிகளை ரெக்கவரி தொழில்நுட்பம் மூலம் மீண்டும் எடுத்து ஆய்வு செய்ய உள்ளனர்.