

பாஜக மீது தமிழக இளைஞர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது என்று தருமபுரியில் நடந்த வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பேசினார்.
தருமபுரியில் நேற்று பாஜக சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் வி.பி.துரைசாமி பேசும்போது, ‘‘ஒழுக்கமாகவும், உண்மையாகவும் உழைக்கும் யாரும் பாஜக-வில் உயர் பதவிகளுக்கு வர முடியும். தினமும் ஓர் அறிக்கை விட்டு, இருக்கும் வாக்குகளையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்,’’ என்றார்.
பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியது:
தன்மானம் மிக்க இளம் தமிழர்கள் தொடர்ந்து பாஜக-வில் இணைந்து வருவதைக் கண்டு மற்ற கட்சியினர் அச்சப்படுகின்றனர். தமிழக இளைஞர்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது. 2021-ல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சி தான் ஆட்சியில் அமரும். 2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் நேரடியாக ஆட்சியைப் பிடித்து கோட்டையில் அமரும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், பாஜக மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் வேல் யாத்திரைக்கு முயன்றதால் வி.பி.துரைசாமி, அண்ணாமலை உட்பட 450 பேர் கைது செய்யப் பட்டனர்.