

புதுக்கோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலங்குடி, சிவகங்கை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் குறித்து ‘ஐபேக்’ என்ற நிறுவனத்தை வைத்து திமுக சர்வே செய்ததைப் போன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு நிறுவனத்தை வைத்து 234 தொகுதிகளிலும் சர்வே செய்துள்ளது. அதன்படி, தொகுதிப் பங்கீடு குறித்து பேச திமுக அழைக்கும்போது எங்களுக்கு சாதகமான தொகுதி களின் கள நிலவரம், வாக்கு வங்கி, வேட்பாளர்களாக பரிந்துரை செய்யப்படுவோரின் பலம் போன்ற விவரங்களோடு பேசுவோம். பொத்தாம் பொதுவாக இத்தனை தொகுதி என எண்ணிக்கையை மட்டுமே முன்னிறுத்தமாட்டோம். ஒவ்வொரு மாநிலத்தின் அரசியல் சூழல் வெவ்வேறாகவே இருக்கும். எனவே, பிஹார் தேர்தல் முடிவோடு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒப்பிட்டு பேசுவது தவறு.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அனைத்து நிலை யிலான அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவிக்காமல், அந்தந்த மாநிலத்தின் தலைமைக்கும், மாவட்டங்களின் தலைமைக்கும் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ தேசிய தலைவர் சோனியா காந்திதான்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமே குடும்ப அரசியல் இருப்பதாக கூறுவது தவறு.
மத்திய உள்துறை அமைச்சர் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். தமிழகத்துக்கு வருவதை பெரிதாக பொருப்படுத்த தேவையில்லை என்றார்.