

தனக்கு கிடைத்த கஜா புயல் நிவாரண நிதியில் அரசுப் பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் வாலிபால் மைதானம் அமைத்துக் கொடுத்துள்ளார் பெண் விவசாயி ஒருவர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்துள்ள நாடங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(36). இவருடைய கணவர் திருநீலகண்டன், 2016-ல் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இவர்களுக்கு சாம்பவி என்ற மகள் உள்ளார். சில ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த பாக்கியலட்சுமி, கணவர் இறந்த பின் அந்த வேலையை விட்டுவிட்டு முழு நேர விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2018-ல் கஜா புயலின்போது இவரது ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பில் 90 சதவீத மரங்கள் சாய்ந்துவிட்டன. தென்னை வருமானத்தை நம்பியிருந்த நிலையில், கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட பாக்கியலட்சுமி தன்னம்பிக்கையுடன் உழைக்கத் தொடங்கினார்.
வாழ்க்கையில் மீண்டுவிட முடியும் என்ற நிலை உருவானபோது, கஜா புயல் நிவாரண தொகையாக ரூ.1.50 லட்சம் இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், பேராவூரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாலிபால் விளையாட்டு மைதானம் இல்லாததால் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவிகள் சிரமப்படுவது குறித்து தன் அண்ணன் மகள் ஷாலினி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அன்னமேரி, ரெங்கேஸ்வரி, வாலிபால் பயிற்சியாளர் நீலகண்டன் ஆகியோர் மூலம் பாக்கியலட்சுமி அறிந்தார்.
இதையடுத்து, தனக்கு கிடைத்த கஜா புயல் நிவாரண தொகை ரூ.1.50 லட்சத்தில் வாலிபால் மைதானம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதையறிந்த பலரும் பாக்கியலட்சுமியை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறியபோது, “கிராமங்களில் பெண்களை இதுபோன்ற விளையாட்டுகள் விளையாட பெற்றோர் அனுமதிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்க, வாலிபால் பயிற்சி பெற மைதானம் இல்லாததை அறிந்து தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்று, கான்கிரீட்டில் வாலிபால் தளம் அமைத்து, சிறிய சுவர் எழுப்பி அதில் செம்மண் கொட்டி விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தினோம். இருபுறமும் இரும்பு போஸ்ட் நட்டு, 12 அடி உயரத்துக்கு கம்பி வேலி அமைத்ததுடன் வலை, பந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்தேன். இப்பணியில் உடற்கல்வி ஆசிரியர்கள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர்” என்றார்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் சுகுணா கூறியபோது, “பாக்கியலட்சுமியின் செயல் பெரும் பாராட்டுக்குரியது” என்றார்.