

கண் பார்வையிழப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக நெசவு கூலி தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால் தமிழக அரசின் திட்டத்திற்கு இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டி, டி.சுப்புலா புரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வேஷ்டி, சேலைகள் இலவச திட்டத்துக்காக அனுப்பப்படுகின்றன. வேஷ்டி, சேலை உற்பத்திக்கு முக்கிய தேவையாக உள்ள நெசவு தறியில் பன் ஏற்றுதல் (அச்சு ஏற்றுதல்) அதாவது தறியில் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கம்பிகளில் ஒரு கம்பியில் இருந்து மற்றொரு கம்பிக்கு இடையில் நூல் கோர்க்கும் பணி ஆகும். இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு தறிக்கு ரூ.200 வீதம் கூலியாக தருகின்றனர். இந்த தொழிலில் தேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நூற் றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போது 18 பேர் மட்டுமே உள்ளனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஜக்கம்பட்டி பன் ஏற்றும் தொழி லாளி எம்.ஈஸ்வரன் கூறியது: பன் ஏற்றும் போதும் கம்பிகளை உற்றுப்பார்த்து கோர்க்க வேண்டும். ஒரு தறியில் பன் ஏற்ற எதிரெதிரே இருவர் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல இடங்களில் கணவர், மனைவி அல்லது தந்தை, மகன் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தறியில் பன் ஏற்றி முடிக்க குறைந்தது 5 மணிநேரம் தேவைப்படுகிறது. ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்படுகிறது. மேலும் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. திருப்பதி, ஆறுமுகம், நம்பிநாயகம் என 40 வயதுக்கு உட்பட்ட பல தொழிலாளர்கள் பார்வை பாதிப்படைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
கண் பார்வை நிரந்தரமாகவும் பறிபோக வாய்ப்புள்ளதால் பலர் இந்த தொழிலைக் கைவிட்டு ஹோட்டல்கள், ஜவுளிக்கடை பணிகளுக்கு செல்லத் தொடங்கி யுள்ளனர். இதனால் இலவச வேஷ்டி, சேலை உற்பத்தியில் பெரிதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தொழிலாளர்கள் ஒவ்வொரு தறிக்கும் 15நாட்களுக்கு ஒருமுறை பன் ஏற்றி தருகின்றனர். இத் தொழிலை காக்க பன் ஏற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு தறிக்கு ரூ.50 கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.