வைகை தண்ணீருக்கு ஏங்கும் தலைமடை கண்மாய்கள்: ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் பாதிப்பு

வைகை தண்ணீருக்கு ஏங்கும் தலைமடை கண்மாய்கள்: ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் பாதிப்பு
Updated on
2 min read

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரால், மதுரை கிழக்கு ஒன்றியத்தில் பத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆனால், வைகை தலைமடையில் உள்ள கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றி யத்தில் விவசாயமே பிரதான தொழில். மொத்தமுள்ள 2.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில், 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்மாய் மூலம் பாசன வசதி பெறுகிறது. கண்மாய் பாசனத்தை உறுதி செய்யும் வகையில் ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, பாலசமுத்திரம், மரிக்குண்டு, கோடாங்கி நாயக்கர் கண்மாய் மற்றும் கோவில்பட்டி கண்மாய்களுக்கு மன்னராட்சி காலத்தி லேயே, மாவூற்று வேலப்பர் கோயில் மலையில் உற்பத்தியாகும் நாகலாறு ஓடையில் இருந்து கால்வாய் வெட்ட ப்பட்டது.

மழை குறைவு காரணமாக அந்த ஓடை வறண்டதால், 1984-ல் துரைச்சாமிபுரம் அருகில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டு, இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது ஆற்றில் தண்ணீர் போனாலும் கூட, இந்தக் கால்வாயில் தண்ணீர் வந்து சேர்வதில்லை. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக, சுமார் 80 கி.மீ. தள்ளியுள்ள கண்மாய்கள் எல்லாம் நிரம்பிவரும் சூழலில், தலைமடை பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளன.

இதுகுறித்து கோவில்பட்டி சக்கிலிச்சி யம்மன் கண்மாய் விவசாயி தங்கராஜ் கூறுகையில், இந்த கால்வாயில் தண்ணீர் வராமல் போனதற்கு முக்கியக் காரணம், ‘ப’ வடிவ பாலங்கள்தான். பொதுவாக கால்வாயை சாலைகள் குறுக்கிடும்போது, கால்வாய்க்கு மேல் பாலம் போடுவார்கள். ஆனால், இங்கே சாலைக்கு கீழே ‘ப’ வடிவத்தில் சுரங்கம் தோண்டி அதன் வழியாக தண்ணீர் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மொத்தம் 11 இடத்தில் ‘ப’ வடிவ பாலங்கள் இருக்கின்றன. இந்த பாலங்கள் நீளமாகவும், தண்ணீர் செல்லும் குழாயின் உள்விட்டம் குறைவாகவும், இருப்பதால் தண்ணீரின் போக்கு தடைபடுகிறது. இதுபோக மணல், குச்சிகள், குப்பைகளும் அடைத்துவிடுகின்றன. விவசாயிகளால் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு நீளமாக இருப்பதால், நான்கு ‘ப’ பாலத்தை கடப்பதற்குள் தண்ணீர் நின்றுவிடுகிறது. இதனால், பெரும்பாலான கண்மாய்களுக்குத் தண்ணீர் செல்வதே இல்லை. இதனால் நஞ்சை நிலம் புஞ்சையாகவும், புஞ்சை நிலம் தரிசாகவும் மாறிவருகிறது.

செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்தான் வைகையில் தண்ணீர் வரும். அதற்குள் கண்மாய்களுக்குத் தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் விவசாயி பெருமாள். “கோயில்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் வராமல் போனதற்கு மாவூற்று ஓடை நீரும், விருமானூத்து ஓடை நீரும் தடைபட்டதும் ஒரு காரணம். இதற்கு மாற்று ஏற்பாடாக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அமச்சியாபுரம், கருங்குளம், செங்குளம் மருகால் தண்ணீயை எங்கள் கண்மாய்க்கு திருப்பிவிட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். 2011-ல் சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆண்டிபட்டி பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோவில்பட்டி கண்மாய்க்கு செங்குளம் மருகால் தண்ணீரை கொண்டு வருவோம்’ என வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. ஐந்தாண்டு ஆட்சி நிறைவு பெற இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கிறது அதற்குள் முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற அமைச்சரும், அதிகாரிகளும் முன்வர வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை” என்றார் கோயில்பட்டி விவசாயி பெருமாள்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை (நீர்ப்பாசனம்) உதவி பொறியாளர் கணேசமூர்த்தியிடம் கேட்டபோது, “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தலைமதகையும், மணல்வாரியையும் சரி செய்தோம். அதேபோல ஆண்டுதோறும் மழைக்காலத்தில் ‘ப’ வடிவ பாலத்தில் உள்ள அடைப்புகளையும் சரி செய்து தருகிறோம். இருந்தாலும், ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் வராததால், கண்மாய்களுக்கு நீர் வந்து சேரவில்லை. செங்குளம் கண்மாயின் உபரி தண்ணீரை, கோவில்பட்டி கண்மாய்க்கு கொண்டு வரும் திட்டம் பொதுப்பணித்துறையின் திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட ஆய்வில் இருக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in