Published : 17 Nov 2020 09:06 PM
Last Updated : 17 Nov 2020 09:06 PM

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமித் ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி: மெட்ரோ ரயில்-2 உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரூ.400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2 உள்ளிட்ட ரூ.67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சென்னை, கலைவாணர் அரங்கில் 21.11.2020 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2 மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கிறார். ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம்.
கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், திருமுல்லைவாயலில் ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார்.

இவ்விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மேலும், இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி-புதுடெல்லி, வாரியத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், வரவேற்புரையாற்றுகிறார். தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், நன்றியுரையாற்றுகிறார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x