

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக வைத்திருக்கும் மடிக்கணினிகள் திருடப்படுவதைத் தடுக்க சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா, அய்யம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.ஜெயக்குமார், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, கொசுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.வசந்தி ஸ்டெல்லா பாய் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கிய மடிக்கணினிகள் 2013-ல் தலைமை ஆசிரியர் அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இதில் அய்யம்பாளையம் பள்ளியில் இருந்து 31, நத்தம் பள்ளியில் இருந்து 26 மடிக்கணினிகள் திருடப்பட்டன.
இதற்கான தொகையை செலுத்தும்படி எங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுக்களின் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
நாட்டிலேயே தமிழ்நாடு தான் இணையதளம் வழி கல்விக்கு (இ-கல்வி முறைக்கு) முன்னோடியாக திகழ்கிறது. அதாவது இந்த கல்வி முறைக்கு நம் பாரதம் ‘நமஸ்தே’ என்று சொல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் ‘வணக்கம்’ என்று சொல்லி விட்டது. புனிதமான நோக்கத்துக்காக பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்கும் அடிமட்ட நிர்வாகத்தில் அந்த நல்ல எண்ணம் இல்லை.
பள்ளி வளாகங்களில் திருடப்படும் மடிக்கணினிகளை கண்டு பிடிப்பதில் போலீஸ் அதிகாரிகளுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இல்லை. மடிக்கணினிகளுக்குரிய தொகையை செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்படும் கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவிலும் அடிப்படை சட்ட நடைமுறைகளை கடை பிடிப்பது இல்லை.
எனவே மடிக்கணினிகள் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வடக்கு, தெற்கு மண்டல ஐ.ஜி.க்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், உயர் நீதிமன்ற கல்வித்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் ஒரு சிறப்புக் குழுவை பள்ளி க்கல்வித்துறை செயலாளர் 8 வாரத்தில் அமைக்க வேண்டும்.
இந்த சிறப்புக்குழு இலவச மடிக்கணினி திட்டம் அமலுக்கு வந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதிவான மடிக்கணினிகள் திருட்டு வழக்குகளில் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிக்கப்பட்ட வழக்குகளை மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அறிவியல்பூர்வமான முறைகளை பயன்படுத்தி திருடப்பட்ட மடிக்கணினிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.