Published : 17 Nov 2020 07:59 PM
Last Updated : 17 Nov 2020 07:59 PM

நாளை முதல் மருத்துவக் கலந்தாய்வு: 3 நாட்களுக்கு சிறப்புப் பிரிவு; நவ.21 முதல் பொதுப்பிரிவினர்

சென்னை

2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் மூன்று நாட்கள் சிறப்புப் பிரிவும், நவ.21 முதல் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று 2020-2021 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

இதில் பொதுப்பிரிவு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு எனத் தனியாக இடம் ஒதுக்கப்படும். இந்த வருடம் முதல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 405 மாணவர்கள் சேர தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி நாளை காலை (நவ.18) காலையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். நேரு உள் விளையாட்டரங்கில் தகுந்த பாதுகாப்பு இடைவெளியுடன் தினமும் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும்.

மாணவர்கள் எந்தத் தேதியில் வரவேண்டும் என்பதை அவர்களுடைய செல்போனுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஆன்லைன் மூலமாகவும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். அதை அறிந்து மாணவர்கள் சரியான நேரத்திற்கு வருகை தரவேண்டும். ஒவ்வொரு மாணவருக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து சரியான முறையில் கவுன்சிலிங் நடத்தப்படும். தினந்தோறும் 500 பேருக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். 175 மாணவர்கள் ஒரு ஷிப்ட் என மூன்று ஷிப்டுகள் மூலம் கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டுமே வர அனுமதி தரப்பட உள்ளது.

நாளை தொடங்கும் கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை கலந்தாய்வு நடக்கும். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

21 ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வுக்காக வெளிநாடு, வெளி மாவட்டங்களிலிருந்து இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்குப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் விவரம்:

மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டது 23,707. இதில் மாணவர்கள் 8,765, மாணவிகள் 14,942. மாநில அரசுக் கல்வித் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 15,885. சிபிஎஸ்இ பாடதிட்டம் மூலம் படித்த மாணவர்கள் 7,366. ஐசிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் படித்தவர்கள் 285. மற்ற பாடதிட்டம் மூலம் படித்தவர்கள் 171 பேர்.

விண்ணப்பித்தவர்களில் நடப்பாண்டு மாணவர்கள் 9,596 பேர். கடந்த ஆண்டு மாணவர்கள் 14,111 பேர்.
மருத்துவப் படிப்பு இடங்கள் விவரம்.

எம்பிபிஎஸ்

அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை: 26

இதிலுள்ள எம்பிபிஎஸ் இடங்கள்: 3650

அகில இந்திய இட ஒதுக்கீடு இடங்கள் போக மாநில அரசு ஒதுக்கீடு: 2805

7.5 விழுக்காடு கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் எண்ணிக்கை: 227

ஒட்டுமொத்தமாக மாநில அரசு இடங்களின் எண்ணிக்கை: 3032

பல் மருத்துவப் படிப்பு இடங்கள் விவரம்

அரசுக் கல்லூரிகள் எண்ணிக்கை: 2

மொத்த இடங்கள் எண்ணிக்கை:194

அகில இந்திய ஒதுக்கீடு போக மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எண்ணிக்கை: 153

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள்: 12

ஒட்டுமொத்தமாக மாநில அரசின் இடங்கள் எண்ணிக்கை: 165

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x